இலங்கையர்களுக்கு ருமேனியாவில் வேலை வாய்ப்பு..


ருமேனியா தற்போது பல பாரிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி வருவதால் இலங்கையர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் Traian Hristea தெரிவித்துள்ளார்.


நேற்று (25) அவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து அலரி மாளிகையில் இது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.


இதேவேளை, ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் இலங்கைத் தூதரகத்தை திறப்பதற்கான தீர்மானத்திற்கு ருமேனிய வெளிவிவகார அமைச்சர் டிரின் ரிஸ்டைம் நன்றி தெரிவித்தார்.


அந்த கலந்துரையாடலில், கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கிய ருமேனிய அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.


2016 ஆம் ஆண்டு முதல், ருமேனியா இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வேலைவாய்ப்பு இடமாக உள்ளது, 32,000 க்கும் மேற்பட்ட இலங்கை பணியாளர்கள் ஆடை, கட்டுமானம், ஹோட்டல் மற்றும் விவசாயத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும், கல்வி, விவசாயம், ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ருமேனியாவை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.


தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு நாட்டிற்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.


இலங்கை ஏற்றுமதிக்கான GSP+ வரிச்சலுகைகளை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ருமேனிய இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎