இலங்கையில்  விரைவில் மின்சார பேருந்து சேவை.


 மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் திரு பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


 அத்துடன் கொழும்பு நகரில் மின்சார பேருந்து  சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


 அதன்படி, UNDPயின் eMobility திட்டத்தின் ஒரு பகுதியாக,முன்னோடித் திட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 300 முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கரவண்டிகளாக  மாற்றப்படும், 


 ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் முழு திட்டத்திற்கும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.


 இலங்கையில் தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள்  காணப்படுவதுடன் எரிபொருள் பிரச்சினைக்கு இந்த முறைமையின் மூலம் தீர்வு காணப்படுவதால் நுகர்வோர் நியாயமான விலையில் பயணிக்க முடியும்.


 இதேவேளை, பயணிகள் போக்குவரத்து தொடர்பான அனைத்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் பொறுப்பேற்குமாறு கோரும் அமைச்சரவைக் குறிப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.


 அப்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் சட்டத்தில் திருத்தம் செய்யவும், கட்டணங்களை நிர்ணயம் செய்யவும், அபராதம் விதிக்கவும் முடியும் என்றார்.


 பெற்றோலிய நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளை விரைவாக அறிமுகப்படுத்துவது தொடர்பான ஆரம்ப விவாதத்தின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.


 இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து  அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் UNDP அதிகாரிகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.