உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியா வசமானது- அதிபர் புடின் அறிவிப்பு


உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புடின் அறிவித்துள்ளார்.


உக்ரைனில் உள்ள டாநட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்த இணைப்பை அங்கீகரிக்க ஐ.நா. மற்றும் மேற்கு உலக நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், இது சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளன.


இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்துள்ள பதிவில், ரஷியாவின் நடவடிக்கைகள் உக்ரைனின் பிராந்தியத்தில் அமைதியைப் பாதிக்கும். இந்த ஆபத்தான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களை நிலைநிறுத்த பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தெளிவாக உள்ளது. ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது ஐ.நா.வின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.


இந்நிலையில், உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. ரஷியா வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன.  4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன.