ஈரானில் 83.7% செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் கண்டுபிடிப்பு: ஐ.நா

ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7%  யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஐ. நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு கூறும்போது, “ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 22-ஆம் தேதி அன்று, ஈரானின் ஃபோர்டோ ஆலையில் சுற்றுச்சூழல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் 83.7% வரை உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் இருப்பதைக் காட்டியது" என்று தெரிவித்துள்ளது.


இதற்கு விளக்கமளித்துள்ள ஈரான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செறிவூட்டல் செயல்பாட்டின்போது எதிர்பார்க்கப்படாத ஏற்ற இறக்கங்கள் விளைவாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.


இதற்கிடையே, திங்களன்று ஐ. நா. பொது சபை கூட்டத்தில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் பேசும்போது, “அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தெஹ்ரான் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக, கடந்த ஆண்டு ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “எங்கள் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப அணுசக்தி திறன்களைப் பெறுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, ஈரானின் செறிவூட்டலுக்கான உச்சவரம்பு 20% ஆக இருக்காது. சொல்லப்போனால் ஈரானின் அணுசக்திக்குத் தேவை ஏற்பட்டால் யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாகக் கூட இருக்கலாம். நாங்கள் அணு ஆயுதங்களைப் பெறவேண்டும் என்று நினைத்தால். அதனை இஸ்ரேல் மற்றும் அதனை வேறு எந்த நாட்டாலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.


ஏன் இந்த சர்ச்சை? - யுரேனியம் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு தனிமம். இவை பெரும்பாலும் அணுசக்தி தொடர்பான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது பொதுவாக U-235 என்று அழைக்கப்படுகிறது. இவை 3-5% செறிவு கொண்டது. இவை பெரும்பாலும் அணுமின் நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.


இதில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் 20% அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் கொண்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுசக்தி ஆராய்ச்சி உலைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அணு ஆயுதங்கள் தயாரிக்க 90% செறிவூட்டப்பட்ட யுரேனியங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 2015-ஆம் ஆண்டு சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் 3.67% யுரேனியத்தை செறிவூட்ட மட்டுமே அனுமதிக்கப்பட்டது.


இந்த நிலையில்தான் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி ஆலையில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐ. நா. கூறியுள்ளது.


ஈரான் - அமெரிக்க மோதல்:

 அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார்.


இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் தெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.(kandytimenews.com)


Author's Recommendation

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலை செய்ய சதித்திட்டம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு.