சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்


டெல் அவிவ் வாட்டர்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இஸ்ரேலில் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தற்போது தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார்.


தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மரின் சிலிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 34 நிமிடமே தேவைப்பட்டது.


35 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் வென்ற 3-வது பட்டமாகும். இதன் மூலம் இந்த சீசனில் கடினதரை (உள்ளரங்க போட்டி), களிமண்தரை (ரோம் ஓபன்), புல்தரை (விம்பிள்டன்) ஆகியவற்றில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.


 ஒட்டுமொத்தத்தில் அவர் கைப்பற்றிய 89-வது சர்வதேச ஒற்றையர் பட்டம் இதுவாகும். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் 'டாப்-8' வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார்.


இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேட்வி மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் சான்டியாகோ கான்ஜாலே (மெக்சிகோ)-ஆண்ட்ரஸ் மால்டெனி (அர்ஜென்டினா) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.