ஷானியின் உயிருக்கு ஆபத்து!  அவரை இயற்கை படுகொலை செய்யும் திட்டம்..


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை கொலை செய்ய சதித்திட்டம்.


குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர பயணம் செய்யும் போது வாகன விபத்தில் அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தமக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திரு.ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இதனை தெரிவித்தார்.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.


திரு.ஷானி அபேசேகரவுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.


இது தொடர்பான மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மனுதாரர் திரு. ஷானி அபேசேகரவுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் தன்மையை வெளிப்படுத்தும் அறிக்கையை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவினர் அனுப்பியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு.ரொஹந்த அபேசூரிய நீதிமன்றத்தில் தெரிவித்தார். .


மனுதாரர் திரு.ஷானி அபேசேகர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரு.உபுல் ஜயசூரிய, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், தனது கட்சிக்காரருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் திருப்தி அடைய முடியாது என தெரிவித்தார்.


அவரது பாதுகாப்பிற்காக பழைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையால் மனுதாரருக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.


முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு , இந்த மனு தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க இம்மாதம் 14ஆம் தேதி மீள அழைக்க உத்தரவிட்டுள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎